கடையநல்லூர் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு


கடையநல்லூர் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 1 Dec 2020 4:23 AM IST (Updated: 1 Dec 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அச்சன்புதூர், 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய மகன் மகேந்திரன் (வயது 22). பூக்கட்டும் தொழிலாளி. அதே தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் மாரியப்பன் (23). தச்சு தொழிலாளி.

நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மாலையில் கடையநல்லூரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தென்காசிக்கு புறப்பட்டு சென்றனர்.

கடையநல்லூரை அடுத்த துரைச்சாமிபுரம் அருகில் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன், மாரியப்பன் ஆகிய 2 பேரின் மீதும் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர்கள் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், இலத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த மகேந்திரன், மாரியப்பன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story