குன்னூரில் ரூ.4½ கோடியில் போலீசாருக்கு தங்கும் விடுதி; போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்


குன்னூரில் தங்கும் விடுதியை திறந்து வைத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டபோது எடுத்தபடம்.
x
குன்னூரில் தங்கும் விடுதியை திறந்து வைத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டபோது எடுத்தபடம்.
தினத்தந்தி 1 Dec 2020 4:24 AM IST (Updated: 1 Dec 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் ரூ.4½ கோடியில் போலீசாருக்கு கட்டப்பட்ட தங்கும் விடுதி மற்றும் மண்டபத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்.

விடுதி, மண்டபம்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவமழை தீவிரம் அடையும்போது, பல்வேறு இடங்களில் இயற்கை பேரிடர் நிகழ்கிறது. அப்போது மீட்பு பணியில் ஈடுபட சமவெளி பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். அவர்கள் குன்னூரில் உள்ள திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். எனினும் போதிய வசதி இன்றி அவர்கள் அவதிப்படும் நிலை இருந்தது.

இந்த நிலையில் காவல்துறை சார்பில் குன்னூரில் போலீசாருக்கு தங்கும் விடுதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுப நிகழ்ச்சி நடத்தி கொள்ள மண்டபம் ஆகியவை ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

5 குழுக்கள்
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலந்துகொண்டு விடுதி மற்றும் மண்டபத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் கூடுதல் சூப்பிரண்டு சங்கு, குன்னூர் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், நீலகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், குன்னூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், மக்கள் மன்ற நிர்வாகி ஜெபரத்தினம், நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி உசேன் அலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது திறக்கப்பட்ட விடுதியில் 100 போலீசார் வரை தங்க வசதி உள்ளது. பேரிடர் காலங்களில் போலீசின் மீட்பு குழுவினர் 5 குழுக்களாக பிரிந்து, பணியில் ஈடுபடுவார்கள் என்றனர்.

Next Story