கோவை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த நஞ்சநாடு அரசு பள்ளி மாணவருக்கு நிதி உதவி
கோவை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த நஞ்சநாடு அரசு பள்ளி மாணவருக்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.
நிதி உதவி
தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற நீலகிரியை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தது. அவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். அதில் ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முத்தோரை கிராமத்தை சேர்ந்த மாணவர் சின்னதுரைக்கு, கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர் கல்வி கட்டணம் செலுத்த நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
புத்தக வாசிப்பு பழக்கம்
நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யா மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை மாணவர் சின்னதுரையிடம் வழங்கினார். பின்னர் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, நூலக ஆர்வலர் விருதுக்கான கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இந்த ஆண்டுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, பந்தலூர் கிளை நூலக மூன்றாம் நிலை நூலகர் அறிவழகனுக்கு விருதுக்கான சான்றிதழ், 50 கிராம் வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை, மேலூர் கிளை நூலக வாசகர் வட்டத்துக்கு நூலக ஆர்வலர் விருதுக்கான கேடயம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும் பொதுமக்கள் இடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்காக பாராட்டுகளை தெரிவித்தார்.
விருது
இதுகுறித்து கலெக்டர் கூறும்போது, பொது நூலகத்துறையில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நூலக இயக்கம் வளர முனைப்புடன் பங்காற்றி நூலக வளர்ச்சியை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வரும் சிறந்த வாசகர் வட்ட தலைவர்களுக்கு நூலக ஆர்வலர் விருது மற்றும் மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், புரவலர்கள் மற்றும் நன்கொடைகள் பெற்று உள்ள மாவட்ட மைய நூலகம், முழுநேர கிளை நூலகம், கிளை நூலகம் ஆகிய சிறந்த நூலகங்களுக்கான கேடயம் வழங்கப்பட்டு வருகின்றது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story