வங்ககடலில் புதிய புயல் உருவாகிறது: தூத்துக்குடியில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்ககடலில் புதிய புயல் உருவாக உள்ளதால், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி,
வங்ககடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் தாழ்வு மண்டலமாக தெற்கு வங்ககடலின் மத்திய பகுதியில் கன்னியாகுமரியில் இருந்து 1,120 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக மாற உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மீன்வளத்துறை அதிகாரிகள் அனைத்து கடலோர கிராமங்களுக்கும் புயல் குறித்து எச்சரிக்கை தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகுகள், 3000 நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து உள்ளனர்.
அதே நேரத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்த 46 விசைப்படகுகள் கரை திரும்பாமல் இருந்தன. புயல் எச்சரிக்கை தொடர்பாக அந்த படகுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து 20 படகுகள் நேற்று காலை கரை திரும்பின. இன்னும் 26 படகுகள் மட்டும் கடலில் உள்ளன. அவர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலைக்குள் அந்த படகுகளும் கரைக்கு திரும்பிவிடும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் வங்ககடலில் புயல் உருவாகி இருப்பது குறித்து, துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதே போன்று வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் கேட்டுக் கொண்டார்.
அவரது வேண்டுகோளை ஏற்று நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி உள்பட 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கடல் வழக்கத்தைவிட கொந்தளிப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story