ஹாவேரி அருகே சம்பவம்: குடும்ப தகராறில் காதல் மனைவி அடித்து கொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது


ஹாவேரி அருகே சம்பவம்: குடும்ப தகராறில் காதல் மனைவி அடித்து கொலை - தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2020 4:57 AM IST (Updated: 1 Dec 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

ஹாவேரி அருகே, குடும்ப தகராறில் காதல் மனைவியை கம்பியால் அடித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஹாவேரி, 

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஒன்னகேரி கிராமத்தை சேர்ந்தவர் நேத்ராவதி(வயது 35). இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தார். அப்போது நேத்ராவதிக்கும், ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் டவுன் மாருதிநகரை சேர்ந்த குலகமன்னவர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு நேத்ராவதியும், குலகமன்னவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் மாருதிநகர் பகுதியில் வசித்தனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குலகமன்னவர் ராணிபென்னூர் டவுனில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நேத்ராவதிக்கும், குலகமன்னவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் நேத்ராவதி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் ஒன்னகேரிக்கு சென்ற குலகமன்னவர், நேத்ராவதியை சமாதானம் செய்து ராணிபென்னூருக்கு அழைத்து வந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேத்ராவதியின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய குலகமன்னவர், வீட்டில் தவறி விழுந்து நேத்ராவதி இறந்து விட்டதாக கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நேத்ராவதியின் பெற்றோர் ராணிபென்னூருக்கு விரைந்து சென்றனர். மேலும் ராணிபென்னூர் டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் நேத்ராவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேத்ராவதியின் கழுத்து, தலை பகுதியில் ரத்தகாயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து குலகமன்னவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது குடும்ப தகராறில் இரும்பு கம்பியால் அடித்து நேத்ராவதியை கொலை செய்ததை குலகமன்னவர் ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். கைதான குலகமன்னவர் மீது ராணிபென்னூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story