பெங்களூரு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


பெங்களூரு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Dec 2020 5:16 AM IST (Updated: 1 Dec 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கதுருகெரே பகுதியில் வசித்து வந்தவர் ரேகா(வயது 23). இவர் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரேகாவுக்கும், ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து ரேகா தனது வருங்கால கணவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வருங்கால கணவரிடம் செல்போனில் பேசிய பின்னர் அறைக்கு சென்ற ரேகா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ரேகாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி அறிந்த மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனது வருங்கால கணவருடன் பேசிவிட்டு ரேகா தற்கொலை செய்து கொண்டதால், செல்போனில் பேசிய போது ஏற்பட்ட தகராறால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஆனால் ரேகா கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேகாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story