கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது


கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
x
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 30 Nov 2020 11:51 PM GMT (Updated: 30 Nov 2020 11:51 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நிதி உதவி திட்டம்
மத்திய அரசு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளிடம் இருந்து ஆதார் அட்டை, பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல்களை கொண்டு வருவாய்த்துறை, வேளாண்மைத்துறையினர் தகுதியான பயனாளிகளை அதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

இதில் விடுபட்ட விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்க அரசு சில தளர்வுகளை வழங்கி எளிய முறையில் மாற்றங்களை செய்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் அல்லாத பலர் இத்திட்டத்தில் முறைகேடாக சேர்ந்து உதவித்தொகையை பெற்றுள்ளனர். இதுசம்பந்தமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 22 வட்டாரங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முறைகேடு
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி புதிதாக சேர்க்கப்பட்ட 1 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேரில் இம்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அல்லாதவர்கள் 70 ஆயிரம் பேரும், இதுதவிர வெளிமாவட்டங்களை சேர்ந்த 36 ஆயிரம் பேரும் என 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் முறைகேடாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் வங்கி கணக்கின் மூலம் ரூ.4 ஆயிரம் பெற்றுள்ளதும், இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் 2 லட்சத்து 37 ஆயிரத்து 57 பேர் முறைகேடாக சேர்ந்து பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இவர்களை கண்டறிந்து அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை திரும்ப பெறும் பணியில் வேளாண் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவர்களுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்கள் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையில் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 21 பேரையும், விழுப்புரம் மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் 2 பேர் கைது
இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா வடக்குதாங்கல் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் நாகப்பன் (வயது 38), ஜி.அரியூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வேல்முருகன் (27) ஆகிய இருவரையும் பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் திருக்கோவிலூர் பகுதியில் தனியார் கணினி மையம் நடத்தி அதன் மூலம் விவசாயிகள் அல்லாத 3 ஆயிரம் பேரை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்த்து பணம் பெற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நாகப்பன், வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story