மராட்டியத்தில் 6 மேல்-சபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு ஆளும் கூட்டணி- பா.ஜனதா இடையே நேரடி போட்டி
6 மேல்-சபை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில் ஆளும் மகாவிகாஸ் கூட்டணி, எதிர்க்கட்சியான பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மும்பை,
மராட்டிய மேல்-சபைக்கு புனே, நாக்பூர், அவுரங்காபாத் பட்டதாரி தொகுதிகள் மற்றும் அமராவதி, புனே ஆசிரியர் தொகுதிகளில் உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) பதவிக்காலம் முடிந்துவிட்டது. மேலும் துலே நந்தூர்பர் உள்ளாட்சி அமைப்பு தொகுதியின் எம்.எல்.சி.யாக இருந்த அம்பரிஷ் படேல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.
இதையடுத்து காலியாக உள்ள இந்த 6 மேல்-சபை தொகுதிகளுக்கும் இன்று(செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக சந்திக்கின்றன. இதில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும், மீதமுள்ள ஒரு இடத்தில் சிவசேனாவும் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சியான பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. ஆளும் கூட்டணி கட்சிகள் மற்றும் பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ள இந்த தேர்தல் ஒரு கவுரவ பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது.
அதுமட்டும் இன்றி கொரோனா நோய் தொற்று பாதிப்பு, புயலால் விளைபயிர்கள் நாசம் என பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவில் ஓராண்டு ஆட்சியை சமீபத்தில் நிறைவு செய்த மாகவிகாஸ் அகாடி அரசுக்கு இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் பாரதீய ஜனதாவும் இந்த தேர்தல் வெற்றியை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருகிறது.
எனவே பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களான முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி ராவ் சாகேப் தன்வே, பிரவின் தாரேக்கர் உள்ளிட்டவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஆளும் கட்சியினர் சார்பிலும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக நாக்பூர் தொகுதி பல ஆண்டுகளாக பா.ஜனதாவின் கோட்டையாக விளங்குகிறது. இதனை பல ஆண்டுகளாக தன்வசம் வைத்துள்ளது. இந்த தொகுதியின் நிலவரம் உற்று நோக்கப்படுகிறது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பட்டதாரி தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளும், ஆசிரியர் தொகுதிகளில் ஆசிரியர்களும், உள்ளாட்சி அமைப்பு தொகுதியில் உள்ளாட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் ஓட்டுப்போடுகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் காலம் என்பதால் தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக 1 லட்சத்து 52 ஆயிரம் முககவசங்கள், 8 ஆயிரத்து 200 கையுறைகள், 14 ஆயிரம் பாட்டில் சானிடைசர்கள், 1,300 வெப்பநிலை கணக்கிடும் கருவிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிக்கவும் வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
வரும் 3-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படுகிறது. அப்போது தேர்தல் முடிவின் சாதகம் ஆளும் கூட்டணிக்கா? அல்லது எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கா? என்று தெரியவரும்.
Related Tags :
Next Story