புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ரெயில் மறியல் போராட்டம் நடத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 101 பேர் கைது


புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ரெயில் மறியல் போராட்டம் நடத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 101 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2020 7:14 AM IST (Updated: 1 Dec 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருச்சியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 101 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு உண்டானது.

திருச்சி,

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அடக்குமுறையால் நசுக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

போலீசாருடன் தள்ளு-முள்ளு

அதன்படி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய ரவுண்டானா அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கொடியுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கோஷம் எழுப்பியபடி ரெயில் நிலையத்திற்குள் செல்வதற்காக வேகமாக முன்னேறி சென்றனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் அருகில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அவர்களை கம்யூனிஸ்டு கட்சியினர் தள்ளி விட்டனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டு மோதல் உண்டானது. போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளி விட்டு ரெயில் நிலையத்தின் முன் பகுதியை நோக்கி சென்றனர்.

முற்றுகை

அப்போது அங்கு அரண் போல் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ரெயில் நிலையத்தின் வாசலில் அவர்கள் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.

101 பேர் கைது

தங்களை ரெயில் தண்டவாளம் வரை செல்ல அனுமதிக்க வேண்டும். மற்ற ஊர்களில் இதேபோல் போலீசார் அனுமதித்து இருப்பதால் திருச்சியிலும் அதேபோல் அனுமதிக்க வேண்டும் என கோரி அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்திய 90 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். முன்னதாக ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் போல் நுழைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 11 பேர் சுரேஷ் தலைமையில், திருச்சியிலிருந்து புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்த ஒரு ரெயில் முன் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தார்கள். இந்த போராட்டம் ரெயில் நிலையத்தின் முன் பகுதி மற்றும் அனைத்து வாசல்களிலும் உள்ளூர் போலீசார், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் என ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story