மோடியின் கவனத்தை ஈர்ப்பதற்காக திருச்சியில் காகித ராக்கெட் விட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 84 பேர் கைது


மோடியின் கவனத்தை ஈர்ப்பதற்காக திருச்சியில் காகித ராக்கெட் விட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 84 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2020 7:18 AM IST (Updated: 1 Dec 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

மோடியின் கவனத்தை ஈர்ப்பதற்காக திருச்சியில் காகித ராக்கெட் விட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 84 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது, தங்களையும் டெல்லி செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.

காகித ராக்கெட்

பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை அச்சிட்டு துண்டு நோட்டீசு போல் வைத்திருந்த காகிதங்களை ராக்கெட் போல் மடித்து அவற்றை மேல்நோக்கி விட்டனர். ஒரே நேரத்தில் பல விவசாயிகள் நடத்திய இந்த நூதன போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த போராட்டம் பற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், ‘பிரதமர் மோடி விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். எங்களை டெல்லிக்கு செல்ல விடாமல் தடுத்து விட்டார். புதிய வேளாண் சட்டங்களால் நெல், கரும்பிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு கிடைக்காது. குத்தகை தாரர்கள் கோர்ட்டுக்கு செல்ல முடியாது. கார்ப்பரேட் கம்பெனிகள் தான் விளை பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்வார்கள். அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. எங்கள் கோரிக்கைகளை மோடிக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராக்கெட் விடும் போராட்டத்தை நடத்தினோம். எங்களுக்கு உரிய பதில் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் ‘ என்றார்.

பின்னர் அய்யாக்கண்ணு உள்பட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். அதன் பின்னரும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

84 பேர் கைது

போராட்டத்தை கைவிடும்படி அய்யாக்கண்ணுவிடம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் எனக் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து அய்யாக்கண்ணு உள்பட 84 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story