தஞ்சையில், பெண் வீட்டு மாடியில் தூக்கில் தொங்கினார்: பந்தல் டெக்கரேசன் உரிமையாளர் மர்ம சாவு


தஞ்சையில், பெண் வீட்டு மாடியில் தூக்கில் தொங்கினார்: பந்தல் டெக்கரேசன் உரிமையாளர் மர்ம சாவு
x
தினத்தந்தி 1 Dec 2020 2:58 AM GMT (Updated: 1 Dec 2020 2:58 AM GMT)

தஞ்சையில், பெண் வீட்டு மாடியில் பந்தல் டெக்கரேசன் உரிமையாளர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரை கொலை செய்து தொங்க விட்டதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சிராஜூதீன் நகரில் வசித்து வந்தவர் மணிகண்டன்(வயது 41). இவருடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் ராமர் கண்டியர் தெரு ஆகும். இவர் சாமி பந்தல் டெக்கரேசன் சென்டர்’ என்ற பெயரில் தனது நிறுவனத்தை தஞ்சை யாகப்பா நகர் பகுதியில் நடத்தி வந்தார். மேலும் வாடகை பொருள் உரிமையாளர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளராகவும் உள்ளார். இவருடைய மனைவி நித்யா(33). இவர்களுக்கு ராகவி(7), ராகவ்(1) என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள கவிதா(42) என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி அருகே உள்ள இரும்பு கம்பியில் கேபிள் வயரால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலின் பேரில் தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

இந்த நிலையில் மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது மனைவி நித்யா போலீசில் புகார் அளித்தார். அதில் தனது கணவரை அடித்துக்கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்க விட்டாகவும், இது தொடர்பாக கவிதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மணிகண்டனுக்கும், கவிதாவுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கவிதா அக்குப்பஞ்சர் சிகிச்சை அளித்து வருகிறார். அவருடைய கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் கவிதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். தனது வீட்டுக்கு வந்த மணிகண்டன் சிறிது நேரம் பேசிவிட்டு மாலை 6.30 மணிக்கு தனது வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதாக போலீசாரிடம் கவிதா கூறியதாக தெரிகிறது. மேலும் இரவு 9 மணியளவில் மாடியில் யாரோ நடக்கும் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கே மணிகண்டன் தூக்கிட்டு இறந்து கிடந்ததாகவும் கவிதா தெரிவித்தார். அவர் சொல்வது உண்மையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story