டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாகர்கோவிலில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாகர்கோவிலில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2020 9:22 AM IST (Updated: 1 Dec 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

பா.ஜனதா அரசின் விவசாய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு விவசாயிகளை நிபந்தனையின்றி அழைத்து பேச்சுவார்த்தை நடத்த கோரியும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க குமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தங்கமோகன் தலைமை தாங்கினார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொருளாளர் அகமது உசேன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் சிங்காரன், நிர்வாகிகள் அந்தோணி, சந்திரபோஸ், பெருமாள், ஜாண் சவுந்தர்ராஜ், சந்திரகலா, சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு

இதே கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சூசைமரியான் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, நிர்வாகிகள் சுசீலா, எஸ்டின், ரமேஷ், கனகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டங்களின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயிகள் சங்கம்

அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட், மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில்சிங், மாதர் சங்க மாநில செயலாளர் உஷாபாசி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சைமன் சைலஸ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story