துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் காலணியில் மறைத்து கடத்திய ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல் - ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கின


துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் காலணியில் மறைத்து கடத்திய ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல் - ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கின
x
தினத்தந்தி 1 Dec 2020 11:00 PM GMT (Updated: 1 Dec 2020 5:00 PM GMT)

துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில், காலணியில் மறைத்து வைத்து ரூ.12 லட்சம் தங்கம் கடத்தி வரப்பட்டது. மற்றொருவரிடமிருந்து ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கின.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அசன் அலி (வயது 23) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து அவரது காலில் அணிந்து இருந்த காலணியை கண்டபோது, சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற சிறப்பு விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் (21) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்களை கைப்பற்றினார்கள்.

2 பேரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story