மேகமலையில் பயங்கரம்: மலைப்பாதையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்; சிறுமி உள்பட 4 பேர் படுகாயம்


மேகமலை மலைப்பாதையில் கவிழ்ந்து கிடக்கும் சுற்றுலா வேனை படத்தில் காணலாம்.
x
மேகமலை மலைப்பாதையில் கவிழ்ந்து கிடக்கும் சுற்றுலா வேனை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 2 Dec 2020 1:45 AM IST (Updated: 1 Dec 2020 11:37 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே மேகமலை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுமி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

வன உயிரின சரணாலயம்
தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் மேகமலையும் ஒன்று ஆகும். இது, சின்னமனூரில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள வன உயிரின சரணாலயம் மற்றும் இயற்கை எழில்மிகு காட்சிகளை ரசிப்பதற் காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருவர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்தநிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் நிவர் புயல் தாக்கம் காரணமாக, மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

வேனில் பயணம்
இந்தநிலையில் நேற்று முதல் மீண்டும் மேகமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் மேகமலைக்கு படையெடுத்தனர். அவர்கள் மேகமலையில் உள்ள சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையே கடந்த வாரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக மேகமலைக்கு செல்லும் மலைப்பாதையில் சில இடங்களில் சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் மலைப்பாதையில் பயணித்த வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்றன. இந்தநிலையில் மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த திருநாவுக்கரசர் (வயது 54), தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வேனில் மேகமலைக்கு சுற்றுலா வந்தார். அந்த வேனில் சிறுவர்கள், பெரியவர்கள் என 14 பேர் பயணம் செய்தனர்.

4 பேர் படுகாயம்
மேகமலையில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த அவர்கள், அதன்பிறகு மதுரைக்கு திரும்பினர். மேகமலை மலைப்பாதையில் கண்ணம்மாள் பாறை என்ற இடத்தில் அவர்களது வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது. பின்னர் அந்த வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் வந்த திருநாவுக்கரசர், தர்ஷினி (11), அருள்மணி (37), காளியம்மாள் (75) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஹைவேவிஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்தபோது தடுப்பு கம்பிகள் அதை தாங்கியது. இதனால் 100 அடி பள்ளத்தில் வேன் விழுவது தவிர்க்கப்பட்டது. இல்லையெனில், பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story