ஆழ்வார்திருநகரியில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆழ்வார்திருநகரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சுடலையாண்டி. அவருடைய மனைவி ஆறுமுகம். இவர்கள் ஆழ்வார்திருநகரி மேலரத வீதியில் டீக்கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுடைய மகள்கள் சந்தன செல்வி (25), விஜயலட்சுமி (23), மகன் இசக்கி தாஸ் (21). இவர்களில் விஜயலட்சுமிக்கு வருகிற 10-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
நேற்று அதிகாலை வழக்கம்போல் சுடலையாண்டியும், அவரது மனைவியும் எழுந்து கடைக்கு சென்று விட்டனர். பின்னர் சந்தன செல்வி எழுந்து சமையலறை அருகே வந்தார். அங்கு கூரையின் மேல் விட்டத்தில் தனது தங்கை விஜயலட்சுமி கழுத்தில் சேலையால் தூக்கில் தொங்கியதை கண்டு அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை அறிந்த பெற்றோரும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
உடனடியாக ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். விசாரணையில், விஜயலட்சுமிக்கு காது சரிவர கேட்காது என்றும், இதனால் அவர் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். திருமண வேலைகள் நடந்து வந்த நிலையில் விஜயலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story