‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் கல்வி கற்க ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த முதியவர்கள்; பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது
கருப்பம்புலத்தில் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் கல்வி கற்க ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த முதியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்'
வயது வந்தோர் கல்வி கற்கும் வகையில் ‘கற்போம் எழுதுவோம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடக்க விழா வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா அரசு உதவி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.விழாவிற்கு கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற உறுப்பினர் ஐஸ்வர்யா தங்கராசு வரவேற்றார். தலைமையாசிரியர் சித்திரவேலு, வட்டாரக்கல்வி அலுவலர் தாமோதரன், ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) தேன்மொழி, ஆசிரியப் பயிற்றுனர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கு வந்த முதியவர்கள்
‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தின் கீழ் கல்வி கற்க குழந்தைவேலு (வயது 92), கோவிந்தராஜ் (91), பெத்து (85), அலமேலு (85) மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் என 25 பேர் தங்களது பேரன், பேத்திகளுடன் பள்ளிக்கு கல்வி கற்ற வந்தனர். இந்த தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் கல்வி கற்க வந்த முதியவர்களை கண்டு இளைஞர்கள் வியந்து பாராட்டினர்.
இதை தொடர்ந்து முதியவர்கள் அனைவருக்கும் பாடநூல், நோட்டு, பேனா, பென்சில், இனிப்பு பொட்டலம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.முன்னதாக கல்வி கற்க வந்த அனைத்து முதியவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
Related Tags :
Next Story