புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: கடற்கரை கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை கிராமங்களில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
இட்டமொழி,
வங்க கடலில் புயல் உருவாகி உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள் தலைமையில், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், ராதாபுரம் தாசில்தார் கனகராஜ் ஆகியோர் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குழி, உவரி உள்பட பல்வேறு மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மீனவர்கள் கடற்கரை பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று வைக்குமாறும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டிடங்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் பாதுகாப்பான முறைகளில் தங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே நேற்று நெல்லை மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புயல் முன்எச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 311 சிறு பாசன குளங்கள், 198 சாதாரண குளங்கள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் மழையில் ஏதேனும் குளங்களில் நீர்க்கசிவு, உடைப்பு ஏற்பட்டால் குளங்கள் அருகே பொக்லைன் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி செயலர், ஒன்றிய பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பரப்பாடி பகுதி குளங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஒன்றிய பொறியாளர் சபரிகாந்த், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் பாஸ்கர், ஆனந்த் ஆகியோர் சென்றனர்.
Related Tags :
Next Story