வலங்கைமான் அருகே வறுமை குறைப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க ரூ.100 வசூல்; ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
வலங்கைமான் அருகே வறுமை குறைப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க ரூ.100 வசூலித்ததாக ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வறுமை குறைப்பு திட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு புத்தாக்க திட்ட செயல்பாடுகளை வாழ்வாதார இயக்க ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் வறுமை குறைப்பு திட்டம் இந்த இயக்கத்தின்கீழ் தற்போது புதிதாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்படி ஊரக பகுதிகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் கண்டு இணையதளத்தில் அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வலங்கைமான் பகுதிக்கான இணையதள பட்டியலில் மிகவும் வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்கள் விடுபட்டுள்ளதால், அவர்களை பயனாளிகளாக பட்டியலில் சேர்க்க ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
ரூ.100 வசூல்
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அவரவர் பகுதிகளில் விண்ணப்பங்களை பெற்று விடுபட்டதாக கூறப்படும் ஏழை, எளிய மக்களை பட்டியலில் சேர்க்கும்படி ஒன்றிய அலுவலக நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள மதகரம் ஊராட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கினர்.
அப்போது விண்ணப்பம் ஒன்றுக்கு தலா ரூ.100 வரை ஊராட்சி மன்ற தலைவர் பவுனம்மாள் சதாசிவம் வசூல் செய்ததாக புகார் தெரிவித்த அந்த பகுதி கிராம மக்கள் நேற்று காலை திடீரென ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விண்ணப்பங்கள் பறிமுதல்
இதைத்தொடர்ந்து ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்த பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிராம மக்கள் போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story