சேலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்; கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


சேலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
x
சேலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
தினத்தந்தி 2 Dec 2020 12:26 AM GMT (Updated: 2 Dec 2020 12:26 AM GMT)

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சேலத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு கண்காட்சி
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கையெழுத்து விழிப்புணர்வு இயக்கம், ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு ஆகியவை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முதலில், சேலம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலுவலகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவர் உலகளாவிய ஒற்றுமை பொறுப்பை பகிர்ந்து கொள்ளுதல் குறித்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து கையெழுத்திட்டார். பின்னர் 2020-21-ம் கல்வியாண்டில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவச மேற்கல்வி வழங்கிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ஊர்வலம்
அதைத்தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் ராமன் வாசித்தார். இதனை அதிகாரிகள், அலுவலர்கள் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக பொதுசுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தை சென்றடைந்தது.

இதில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். இந்த நிகழ்ச்சியில், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார், மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் வளர்மதி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் கோகுலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

637 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 917 பேருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றுள்ளனர். இவர்களில் 637 பேருக்கு புதிதாக எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 22 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே எச்.ஐ.வி. பாதித்த 43 கர்ப்பிணிகள் தாய்-சேய் மேவா திட்டம் மூலமாக புதிய கூட்டு மருந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தொற்றில்லாத குழந்தை பிறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தான் அதிமான எச்.ஐ.வி. பாதித்தவர்களுக்கு ஏ.ஆர்.டி. கூட்டுமருந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.

ரத்த வங்கிகள்
சேலம், ஆத்தூர் மற்றும் ஓமலூர் ஆகிய இடங்களில் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமியின் அளவினை கணக்கிடும் கருவி அமைக்கப்பட்டு இதுவரை 5 ஆயிரத்து 766 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சேலம், மேட்டூர், ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள ரத்த வங்கிகள் மூலமாக 2019-20 ஆண்டில் 201 ரத்ததான முகாம் நடத்தப்பட்டு 31, 118 யூனிட்டுகள் ரத்த சேகரிப்பு பெறப்பட்டுள்ளது. மேலும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story