பெங்களூருவில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது
பெங்களூருவில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு ஞானபாரதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உல்லால் உபநகர் அருகே விஸ்வேசுவரய்யா லே-அவுட் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பாக சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த வாலிபரிடம் நடந்த சோதனையின் போது அவரிடம் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், துமகூரு மாவட்டம் குனிகல்லை சேர்ந்த புனித்(வயது 32) என்று தெரியவந்தது.
இவர், தனக்கு தெரிந்த கஞ்சா வியாபாரியிடம் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, அவற்றை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. புனித்திடம் இருந்து 10 கிலோ கஞ்சா, ஒரு செல்போன், ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான புனித் மீது ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இதுபோன்று, சந்திரா லே-அவுட் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அருந்ததிநகரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மது மற்றும் விஜய்குமார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் 2 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான 2 பேரிடம் இருந்து 395 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், மாகடி ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே போதைப்பொருள் விற்ற பெட்ரிக்(32) என்பவரை கே.பி.அக்ரஹாரா போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 665 கிராம் சிரஸ் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான பெட்ரிக் மீது கே.பி.அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு பெட்ரிக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story