ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த மனுக்கள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்;கலெக்டரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், பி.முருகன்
x
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், பி.முருகன்
தினத்தந்தி 2 Dec 2020 6:21 AM IST (Updated: 2 Dec 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறி கலெக்டரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், பி.முருகன் ஆகியோர் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., துணை செயலாளர் வேப்பனப்பள்ளி பி.முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ரகுநாத், நாகேஷ் மற்றும் நிர்வாகிகள் கருணாகரன், சதாசிவம், சிவன், முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அந்த மனுவில், 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க, திருத்தம் நடைபெற்று வருகிறது. அதற்கான சிறப்பு முகாம்களும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. டிசம்பர் மாதத்திலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர் நீக்க கோரியும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடியிருப்பு மாறியதால் முகவரி மாற்றம் கோரியும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விவரங்களை தெரிவிக்க வேண்டும்
இந்த மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் பாக நிலை அலுவலரிடமோ, இணையதளம் வாயிலாகவோ, முகாம் நடந்த அன்றோ, வாக்காளர்களால் நேரடியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் மூலமாகவோ கொடுக்கப்பட்டு இருக்கும். இதுவரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுக்கள் மற்றும் இணைய தள வழியாக பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்த முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

பாகநிலை அலுவலர்களுக்கான கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி பாகநிலை அலுவலர்களால் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள படிவங்களை சி.டி. மூலமாக ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வாரியாக கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story