டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2020 3:20 AM GMT (Updated: 2 Dec 2020 3:20 AM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2-வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை ஆதரித்தும், டெல்லி நகரத்திற்குள் வர விடாமல் விவசாயிகள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக...

இதனை தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சித்ரா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார், ரமேஷ், சேகர், அய்யாக்கண்ணு ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். இதில் விக்கிரவாண்டி ஒன்றியத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருவெண்ணெய்நல்லூரில் வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையிலும், வீரபாண்டியில் வட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும், திண்டிவனத்தில் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமையிலும், கஞ்சனூரில் மாவட்டக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story