அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை விற்பனையால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு தோப்பு என்.டி.வெங்கடாசலம் குற்றச்சாட்டு


அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை விற்பனையால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு தோப்பு என்.டி.வெங்கடாசலம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Dec 2020 10:42 AM IST (Updated: 2 Dec 2020 10:42 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை விற்பனையால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு, அடிப்படை வசதிகளும் செய்ய முடியாத நிலை இருப்பதாக தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

ஊத்துக்குளி,

சென்னிமலை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதி மக்கள் சமீபத்தில் என்னை சந்தித்து, தங்கள் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பெருந்துறை தொகுதி மட்டுமின்றி வழியோர கிராம மக்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளிடம் கூறி இருந்தேன்.

இதுதொடர்பான ஆய்வு பணி நடந்தபோது, குடிநீர் கேட்டு விண்ணப்பித்த பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டு வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டது என்பதும், அங்கு அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல், நகர ஊரமைப்பு அலுவலகத்தில் மனை அங்கீகாரம் பெறாமல் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி, ஒரு வீட்டுமனை உருவாக்கப்படும் போது அரசு திட்டங்கள் நிறைவேற்ற என்று காலியாக விடவேண்டிய இடம் ஒதுக்காமலேயே விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு குடிநீர் தொட்டி அமைக்க தேவையான அரசு இடம் இல்லை என்பதால், அந்த மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

பல கோடி ரூபாய் இழப்பு

இதுதொடர்பாக மேலும் நான் விரிவான ஆய்வு செய்தபோது பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளிலேயே பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் வீட்டு மனையாக மாற்றப்பட்டு அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது. இது மிகப்பெரிய மோசடியாகும்.

குறிப்பாக இந்த வீட்டு மனைகள் அனைத்தும் விவசாய நிலங்களாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. பின்னர் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் எதுவும் செய்வதற்கு ரிசர்வு சைட் எனப்படும் காலி இடம் அரசிடம் ஒப்படைப்பு செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், டி.டி.சி.பி. அங்கீகாரம் பெறாமல் பத்திரப்பதிவு நடந்து உள்ளது. இதன் மூலம் அரசுக்கு பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் கிடைக்க வேண்டிய பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிராம ஊராட்சி பகுதிகளில் ஊராட்சியின் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெறப்படாமல் விற்பனை செய்யப்படும் வீட்டுமனைகளால் ஊராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் தொட்டி கட்டுதல், பூங்கா அமைத்தல், நடைபயிற்சி தளம் அமைத்தல், நூலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைத்தல் உள்ளிட்ட எந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளும் செய்ய முடிவதில்லை. பெருந்துறை தொகுதியை பொறுத்தவரை இந்த மோசடி மற்றும் முறைகேடு செய்பவர்கள் ஆளும் கட்சியின் பெயரை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் அரசுக்கு இழப்பு என்பதுடன் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. பெருந்துறை தொகுதி என்றாலே அது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது அத்திக்கடவு-அவினாசி திட்டம், கொடிவேரி-பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும், அ.தி.மு.க. கட்சி மீதும் மேலும் ஆதரவு தரும் திட்டங்களாக உள்ளன. இந்த நிலையில் கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி மோசடி வேலைகளில் ஈடுபடுவர்கள், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற உரிய அங்கீகாரம் பெறாதவர்கள் என்று அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story