தாலுகா அலுவலகத்தில் இலவச வேட்டி- சேலைகள் திருட்டு ஊழியர்களுக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை


தாலுகா அலுவலகத்தில் இலவச வேட்டி- சேலைகள் திருட்டு ஊழியர்களுக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 2 Dec 2020 11:11 AM IST (Updated: 2 Dec 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தாலுகா அலுவலகத்தில் இலவச வேட்டி-சேலைகள் திருட்டு போனது. இதில் ஊழியர்களுக்கு தொடர்பா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தகுதியான ரேஷன்கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி- சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக நாகர்கோவிலில் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக கட்டிடத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம், தாலுகா தேர்தல் அலுவலகத்தில் உள்ள பொருள் வைப்பு அறையில் வேட்டி- சேலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

அவற்றில் 100 வேட்டிகளும், 6 சேலைகளும் திடீரென மாயமாகி இருந்தன. யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு தொடர்பு?

இதுகுறித்து அதிகாரிகள் கவனத்துக்கு வந்ததும் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேட்டி- சேலைகள் திருட்டு போன சம்பவத்தில் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் யாருக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாலுகா அலுவலகத்தில் வேட்டி- சேலைகள் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story