புயல் சின்னம்: ராமேசுவரத்துக்கு பேரிடர் மீட்புக்குழு வருகை - பாம்பன் பாலத்தில் பயணிகள் இன்றி ரெயில் இயக்கம்
புயல் சின்னம் காரணமாக ராமேசுவரத்துக்கு பேரிடர் மீட்புக்குழு வந்தது. பாம்பன் பாலத்தில் பயணிகள் இன்றி நேற்று சென்னை ரெயில் இயக்கப்பட்டது.
ராமேசுவரம்,
வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் கனமழை மற்றும் மிக கன மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து 2 குழுவாக மொத்தம் 40 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவானது நேற்று ராமேசுவரம் வருகை தந்தது. இதில் 20 பேர் கொண்ட ஒரு குழுவினர் ராமேசுவரத்திலும், மற்ற 20 பேர் மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
இதனிடையே புயல் சின்னத்தை தொடர்ந்து 2 நாட்களுக்கு பாம்பன் ரெயில் பாலத்தில் பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ராமேசுவரத்தில் இருந்து நேற்று இரவு 8.25 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட ரெயிலானது பயணிகள் இல்லாமல் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு பாம்பன் ரெயில் பாலத்தை கடந்து மண்டபம் சென்றடைந்தது. முன்னதாக ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் அனைவரும் அரசு பஸ்கள் மூலமாக மண்டபம் ரெயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து பயணிகள் அனைவரும் அந்த ரெயிலில் ஏறி பயணம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story