நீட் தேர்வில் வெற்றி பெற்றும் இணையதள வசதி இல்லாததால் மருத்துவ கலந்தாய்வை தவறவிட்ட மாணவி - அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை


நீட் தேர்வில் வெற்றி பெற்றும் இணையதள வசதி இல்லாததால் மருத்துவ கலந்தாய்வை தவறவிட்ட மாணவி - அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2020 4:45 PM IST (Updated: 2 Dec 2020 4:32 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் இணையதள வசதி இல்லாததால் மருத்துவ கலந்தாய்வை மாணவி தவறவிட்டார். அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே குருந்தங்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல், சந்திரா தம்பதியினரின் மகள் கவுசல்யா. பழையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர் பிளஸ்-2 தேர்வில் 1111 மதிப்பெண் பெற்றார். மருத்துவராக ஆசைப்பட்ட அவர் நீட் தேர்வு எழுதினார்.

அதில் தோல்வியடைந்ததால் மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். இருந்தபோதிலும் தனது மருத்துவர் கனவால் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி வந்தார். இந்தாண்டு 3-வது முறையாக தேர்வு எழுதிய அவர், 252 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.அவரது குடும்பத்தாரிடம் ஸ்மார்ட் போன் கூட இல்லாததால், உறவினர் ஒருவரது உதவியால் மின்னஞ்சல் முகவரி தொடங்கி, அதனை தனது விண்ணப்பத்தில் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அவருக்கு பொது பிரிவில் 145-வது இடமும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 46-வது இடமும் பெற்றார். மேலும் அவரை கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி கலந்தாய்வுக்கு அழைத்துள்ளனர். இத்தகவலை மருத்துவ கல்லூரி இயக்குனரகம் மாணவியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளது.

இணைய வசதி இல்லாததால் இந்த தகவலை கவுசல்யா கவனிக்கவில்லை.

இந்நிலையில் அவரை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சிலருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததை அறிந்த பிறகே, கவுசல்யா தனது மின்னஞ்சல் முகவரியை பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்கு அழைப்பு கடிதம் வந்துள்ளது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

படிப்பறிவு இல்லாத ஏழ்மை பெற்றோராலும், இணைய வசதி இல்லாததாலும் மருத்துவ படிப்பில் இடம் உறுதியாகியும் கலந்தாய்வை தவறவிட்ட மாணவிக்கு அரசு கைகொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மாணவி கூறும் போது, அரசு ஒதுக்கீட்டில் எனக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும், கலந்தாய்வு விவரம் இ-மெயிலில் அனுப்பப்பட்டதால் என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் அதை முன்கூட்டியே பார்க்க முடியவில்லை.

தற்போது கலந்தாய்வு விவரம் தாமதமாக தெரிந்தும் அதில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அரசு எனக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றார்.

Next Story