ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் கேமராக்கள் செயல்பட தொடங்கியது


ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் கேமராக்கள் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 2 Dec 2020 4:00 PM GMT (Updated: 2 Dec 2020 3:46 PM GMT)

ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் கேமராக்கள் செயல்பட தொடங்கியது.

ஊட்டி,

ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு கோத்தகிரி, குன்னூர், கூடலூர் சாலைகள் மற்றும் ஊட்டி கமர்சியல் சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகிறவர்கள் இந்த வழியாக செல்கின்றனர்.

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க சேரிங்கிராசில் அதிநவீன தானியங்கி வாகன பதிவு எண் பதிவு செய்யும் கேமராக்கள் பொறுத்தப்பட்டது. இந்த கேமராக்கள் ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறையோடு இணைக்கப்பட்டது. அங்குள்ள டி.வி.யில் அந்த காட்சிகளை பார்வையிடவும் வசதி செய்யப்பட்டது.

இந்த கேமராக்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டார். முதல் நாளிலே இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, 2 நபர்களுக்கு மேல் பயணிப்பது மற்றும் போக்குவரத்து சிக்னல் அருகே வாகனங்கள் நிறுத்தக் கூடிய கோடுகளை தாண்டி சென்று நிறுத்துவது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் வாகன பதிவு எண் பதிவானது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் வாகன பதிவு எண் பதிவு செய்யும் 5 கேமராக்கள் உள்பட 9 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே பொருத்தப்பட்ட கேமராக்கள் வீடியோ மட்டும் பதிவு செய்யும். தற்போது பொருத்தப்பட்ட அதிநவீன தானியங்கி கேமராக்கள் பதிவு செய்வதோடு, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்ணை புகைப்படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களின் ஈடுபடுபவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அபராதம் விதிக்கப்படுகிறது. வாகன பதிவு எண்ணுடன் செல்போன் எண் உள்ளது. அந்த எண்ணுக்கு போக்குவரத்து விதிமீறல், அபராதம் எவ்வளவு, கட்ட வேண்டிய வழிமுறைகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால் வாகனங்களை சாலையில் நிறுத்தி சோதனை செய்வதை தவிர்க்கப்படும். மாவட்டத்தில் உள்ள 16 சோதனை சாவடிகளில் தலா ஒரு வாகனபதிவு எண்ணை பதிவு செய்யும் கேமரா உள்பட 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story