சிங்காரா, குன்னூர் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் - 3 நாய்களை தூக்கி சென்றது


சிங்காரா, குன்னூர் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் - 3 நாய்களை தூக்கி சென்றது
x
தினத்தந்தி 2 Dec 2020 9:30 PM IST (Updated: 2 Dec 2020 9:22 PM IST)
t-max-icont-min-icon

சிங்காரா மற்றும் குன்னூர் அருகே சிறுத்தைப்புலி நடமாடி வருவதுடன் 3 நாய்களையும் தூக்கிச்சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கிளன்மார்கன் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மலைப்பாங்கான அடர்ந்த வனம் வழியாக சிங்காரா மின் உற்பத்தி நிலையத்துக்கு ராட்சத குழாய் மூலம் (டனல்) தண்ணீர் செல்கிறது. மின் உற்பத்தி நிலையம் செயல்படுவதால் சிங்காரா, மாயாறு உள்ளிட்ட இடங்களில் மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் குடியிருப்புகள் உள்ளது.

இந்த நிலையில் சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் மின் வாரிய குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடி வருகிறது. மேலும் அப்பகுதியில் மின் உற்பத்தி நிலையத்துக்குச் செல்லும் ராட்சத குழாய்கள் உள்ள இடத்தில் சிறுத்தைப்புலி பதுங்கி இருக்கிறது.

பொதுமக்கள் நடமாடும் போது சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடி புதர்களுக்குள் சென்றுவிடுகிறது.இதனால் அப்பகுதி பொதுமக்களும் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. தொடர்ந்து சில மணி நேரம் கழிந்த பின்னர் சிறுத்தைப்புலி மீண்டும் அப்பகுதிக்கு வந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் குன்னூர் அருகே சின்ன வண்டி சோலை குடியிருப்பு பகுதியில் மற்றொரு சிறுத்தைப்புலி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரத்தில் அங்கு வந்த சிறுத்தைப்புலி மரி என்பவர் ஆசையுடன் வளர்த்து வந்த நாயை தூக்கிச்சென்றது. அந்த நாயின் உடல் பகுதி அருகில் உள்ள மரத்தில் இருந்தது.

இது குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த சிறுத்தைப்புலி அந்த கிராமத்துக்குள் புகுந்து 3 நாய்களை தூக்கிச்சென்றதும் தெரியவந்தது.

எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story