என் விரோதிகளிடம் எடியூரப்பா நட்பு பாராட்டுகிறார் எச்.விஸ்வநாத் வேதனை


என் விரோதிகளிடம் எடியூரப்பா நட்பு பாராட்டுகிறார் எச்.விஸ்வநாத் வேதனை
x
தினத்தந்தி 3 Dec 2020 3:00 AM IST (Updated: 3 Dec 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

தன் விரோதிகளிடம் முதல்-மந்திரி எடியூரப்பா நட்பு பாராட்டுவதாக எச்.விஸ்வநாத் வேதனையுடன் கூறினார்.

மைசூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏ.க்களில் எச்.விஸ்வநாத்தும் ஒருவர். ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏ.க்களுக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் என்று பா.ஜனதாவினர் உறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்போது எச்.விஸ்வநாத்துக்கு மந்திரி பதவி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த அவருக்கு பா.ஜனதா சார்பில் நியமன எம்.எல்.சி. பதவி வழங்கப்பட்டது.

ஆனால் நியமன எம்.எல்.சி.க்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து கர்நாடக மாநில அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த எச்.விஸ்வநாத் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு(எச்.விஸ்வநாத்) விரோதியாக இருப்பவர்களுடன் பா.ஜனதாவினர் நட்பு பாராட்டுகிறார்கள். குறிப்பாக எனக்கு விரோதிகளாக இருப்பவர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நட்பாக பழகி வருகிறார். இது எப்படி இருக்கிறது என்றால், தந்தையை கொன்றவரை தாய் திருமணம் செய்து கொண்டு ஊர்வலம் வருவது போன்று உள்ளது.

சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்க ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. பா.ஜனதா ஆட்சி அமைய அவர் காரணமாக இருந்தாரா என்ன?. அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தாரா?. மும்பைக்கும், புனேவுக்கும் அலைந்து திரிந்தாரா?. பா.ஜனதா ஆட்சி அமைந்ததற்கான காட்சிகளில் சி.பி.யோகேஷ்வரின் கதாபாத்திரம் ஏதும் இல்லை. அதனால் அவருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது.

பா.ஜனதாவினரின் எதிர்ப்பையும் மீறி சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டால், அது முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு அவநம்பிக்கையை பெற்றுத்தரும். பா.ஜனதாவினரே எடியூரப்பா மீது அவநம்பிக்கை கொள்வார்கள். கோர்ட்டின் தீர்ப்பை நான் மதிக்கிறேன்.

கோர்ட்டின் தீர்ப்பு நகல் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. தீர்ப்பு நகல் கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். 2027-ம் ஆண்டு வரை எம்.எல்.சி.யாக இருப்பேன். அதுவரை எனது பதவிக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது. ஆட்சி அமைவதற்கு முன்பு எடியூரப்பா என்னிடம் பேசியது வேறு. ஆனால் அவர் இப்போது நடந்து கொள்ளும் முறையும், பேசும் முறையும் வேறு. பா.ஜனதா ஆட்சி அமைய நான் செய்த காரியங்களை யாரும் செய்திருக்க மாட்டார்கள்.

தற்போது எடியூரப்பா மீது எனக்கு மன வருத்தம் உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். என் மன வருத்தத்தை முதல்-மந்திரி எடியூரப்பாதான் போக்க வேண்டும். இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.

Next Story