பெங்களூருவில், டீக்கடைக்காரரிடம் போலி தங்கம் விற்க முயன்ற ஓசூர் வாலிபர் கைது


பெங்களூருவில், டீக்கடைக்காரரிடம் போலி தங்கம் விற்க முயன்ற ஓசூர் வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2020 4:00 AM IST (Updated: 3 Dec 2020 2:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் டீக்கடைக்காரரிடம் போலி தங்கம் விற்பனை செய்ய முயன்ற ஓசூர் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு, 

பெங்களூரு பனசங்கரி 2-வது ஸ்டேஜில் ‘டீ’ கடை நடத்தி வருபவர் சுகேஷ். இவரது கடைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சங்கர்(வயது 38) என்பவர் வந்திருந்தார். சுகேஷ் கடையில் இருந்து டீ குடித்துவிட்டு, அவருடன் நீண்ட நேரம் பேசிவிட்டு சங்கர் அங்கிருந்து சென்றார். இதன் மூலம் சுகேசுக்கும், சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் சுகேஷ் கடைக்கு சங்கர் வந்திருந்தார். அப்போது தங்க கட்டிகளை சுகேசிடம் சங்கர் கொடுத்தார்.

அந்த தங்க கட்டிகள், ஓசூரில் உள்ள குப்பை தொட்டி அருகே கிடைத்ததாகவும், தன்னிடம் 2 கிலோவுக்கு தங்கம் இருப்பதாகவும், பணப்பிரச்சினை காரணமாக, அவற்றை விற்க முடிவு செய்திருப்பதாகவும் சுகேசிடம் சங்கர் கூறினார். மேலும் 2 கிலோ தங்கத்திற்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் போதும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுகேஷ், 2 கிலோ தங்கத்தையும் எடுத்து வரும்படியும், அது உண்மையானதா? என்று பரிசோதித்து விட்டு வாங்கி கொள்வதாகவும் சங்கரிடம் கூறி இருந்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் 2 கிலோ தங்கத்துடன் சுகேசின் கடைக்கு சங்கர் வந்திருந்தார். அந்த தங்கத்தை வாங்கி அவர் பரிசோதித்து பார்த்த போது, அவை போலியானது என்பதை கண்டுபிடித்தார். இதுபற்றி சங்கரிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். இதுகுறித்து பனசங்கரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது அது போலி தங்கம் என்றும், அவற்றை விற்று சுகேசிடம் ரூ.3 லட்சம் வாங்கி சங்கர் மோசடி செய்ய முயன்றதும் தெரிந்தது.

அதைத்தொடர்ந்து, சங்கரை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் இருந்து 2 கிலோ போலி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் போலி தங்கத்தை விற்க முயன்றது தெரியவந்தது. கைதான சங்கர் மீது பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story