ரூ.1,295 கோடி குடிநீர் திட்டத்துக்கு நாளை அடிக்கல் நாட்டு விழா: எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை
மதுரை, சிவகங்கையில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை தருகிறார்.
குடிநீர் திட்டம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்திற்கான டெண்டர் விடும் பணிகள் முடிந்து விட்டன.
அதன் தொடர்ச்சியாக இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.30 கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலக விரிவாக்க கட்டிடம் உள்ளிட்ட ரூ.69 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் இன்று (வியாழக்கிழமை) இரவு மதுரை வருகிறார். அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் முதல்-அமைச்சரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் வாடிப்பட்டி தனிச்சியம் பிரிவு அருகே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் விரகனூர் ரிங்ரோடு பகுதியிலும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிவகங்கையில் ஆய்வுக்கூட்டம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விழா முடிந்த பின்னர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். பின்னர் அங்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதற்காக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் உள்ள தார் சாலையை புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கலெக்டர் அலுவலகம் முன்பு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஏற்பாடுகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாஸ்கரன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வரவேற்பு
முன்னதாக மதுரையில் இருந்து கார் மூலம் வரும் முதல்-அமைச்சருக்கு அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மணலூர், பூவந்தி, திருமாஞ்சோலை ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிவகங்கை நகர் எல்லையான ரிங் ரோடு பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறங்களிலும் நின்று அ.தி.மு.கவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர்.
விவசாயிகளின் சார்பில் சிவகங்கை-மேலூர் சாலையில் உள்ள அண்ணா சாலையில் இருந்து பயணிகள் விடுதிகள் வரை சாலையின் இருபுறத்திலும் வாழைகள் மற்றும் கரும்பு ஆகியவற்றை தோரணமாக கட்டி வரவேற்பு அளிக்கிறார்கள்.
Related Tags :
Next Story