மண் அள்ள பாஸ் வழங்க வலியுறுத்தி கலெக்டரின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலெக்டர் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலெக்டர் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
தினத்தந்தி 3 Dec 2020 7:03 AM IST (Updated: 3 Dec 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மண் அள்ள பாஸ் வழங்க வலியுறுத்தி கலெக்டரின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் கார் முற்றுகை
புயல் காரணமாக செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுமதி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று மதியம் வந்தார். அவருடன் கலெக்டர் கண்ணன், சப்-கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை கோவனேரி கண்மாயை பார்வையிட அவர்கள் சென்றனர். இதையறிந்த குலாலர் தெரு மக்கள் கலெக்டர் வந்த காரை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் செங்கல் தயாரிப்பதற்கு மண் அள்ள பாஸ் வழங்க வேண்டும், சொந்த நிலத்தில் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை
பின்னர் அவர்கள் அதிகாரிகளின் வாகனங்கள் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள், கண்மாய்களை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். கலெக்டர் ஆய்வு முடித்து விட்டு, திரும்பி செல்லும் வரை அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story