3 நகராட்சி பகுதிகளுக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணி; அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணியை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.
பூமி பூஜை
விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கு ரூ.445 கோடி மதிப்பீட்டிலான கூடுதல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்தார். இந்த திட்ட பணியின் தொடக்க விழா நேற்று சாத்தூர் அருகே உள்ள வன்னி மடை கிராமத்திலும், விருதுநகர் அருகே உள்ள செந்நெல்குடி கிராமத்திலும் நடைபெற்றது.
கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-
ரூ.445 கோடியில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினேன். அதன்பேரில் இந்த 3 நகராட்சி பகுதிகளுக்கும் கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்தார்.
குடிநீர் திட்டம்
இதனை தொடர்ந்து தற்போது கலெக்டர் தலைமையில் இத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளேன். ஏற்கனவே சாத்தூருக்கு சீவலப்பேரியில் இருந்தும், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சி பகுதிகளுக்கு வல்லநாட்டில் இருந்தும் தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது இந்த 3 நகராட்சி பகுதிகளுக்கு சீவலப்பேரியில் இருந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சாத்தூருக்கு கூடுதலாக தினசரி 30 லட்சம் லிட்டர் தண்ணீரும், விருதுநகருக்கு 90 லட்சம் லிட்டர் தண்ணீரும், அருப்புக்கோட்டைக்கு 126 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
முற்றிலும் தீர்வு
கூடுதல் குடிநீர் புதிய மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு அதன்மூலம் வினியோகிக்கப்படும். இதனால் இந்த 3 நகராட்சி பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு முற்றிலும் தீர்வு ஏற்படும். ஏற்கனவே ராஜபாளையம், திருத்தங்கல் நகராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் அடுத்த 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை என்ஜினீயர் முத்து பழனியப்பன், நிர்வாக என்ஜினீயர் ஜெயபிரகாஷ், விருதுநகர் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜய குமரன், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், யூனியன் துணை தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், கோட்டாட்சியர் காசி செல்வி, விருதுநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி, மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோவன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன், புரட்சித்தலைவி அம்மா பேரவை பால்ராஜ், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் சங்கரலிங்கம், மாவட்ட அம்மா பேரவை நடராஜன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story