டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரெயில் மறியல், முற்றுகை போராட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரெயில் மறியல், முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2020 7:21 AM IST (Updated: 3 Dec 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரெயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

திருச்சி,

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று காலை திருச்சி பாலக்கரை ரெயில் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாலக்கரை பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேலப்புதூர் சுரங்கப்பாதை அருகே ரெயில்வே பாலத்தில் அமர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசாரும், பாலக்கரை போலீசாரும் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர்.

இதுபோல் ஜீயபுரம் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக ஜீயபுரம் ரெயில் நிலையம் நோக்கி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் ரெயில்வே கேட் அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் வேலுசாமி தலைமையில் எடமலைப்பட்டி புதூரில் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது பாடை கட்டி அதில் ஒருவரின் பிணம் போல் படுக்க வைத்து அவருக்கு மாலை அணிவித்து, அங்குள்ள வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக தூக்கி வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அவர்களை தடுத்ததால் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.இதுபோல் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பாக நேற்று திருச்சி உறையூர் குறத்தெருவில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார்.

Next Story