தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல்; 231 பேர் கைது


தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல்; 231 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2020 9:12 AM IST (Updated: 3 Dec 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 231 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படுவது போல, தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் குறைந்தபட்சம் மாதம் ரூ. 3ஆயிரம், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் என தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

231 பேர் கைது

தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்த தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை, முழு ஊதியம் ரூ. 256 வழங்கிட உத்திரவாதப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் துணைத்தலைவர் சங்கிலிமுத்து, துணை செயலாளர்கள் ராஜன், செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 117 பெண்கள் உள்பட 231 பேர் கைது செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story