மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.25 கோடி கடன் உதவி; அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
திருப்பத்தூரில் நடந்த விழாவில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.25 கோடி கடன் உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
ரூ.25 கோடி கடன் உதவி
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 436 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25 கோடியே 36 லட்சம் வங்கிக் கடனுதவி, மற்றும் 120 உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத அரசு மானியமாக ரூ.30 லட்சத்திற்கான விடுவிப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார்.
மகளிர் திட்ட இயக்குனர் மகேஸ்வரி வரவேற்றார். திருப்பத்தூர் உதவி கலெக்டர் வந்தனாகார்க், திட்ட இயக்குனர் மகேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு கடன் உதவி வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
ஆண்களுக்கு நிகராக
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரம் மகளிர் குழுக்கள் உருவாக்கப்பட்டு ரூ.600 கோடி கடனுதவி பெற்று பயனடைந்துள்ளனர். 2019 -20-ம் ஆண்டுகளில் ரூ.250 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 87 ஆயிரத்து 890 பயனாளிகளுக்கு ரூ.258 கோடி வழங்கப்பட்டு உள்ளது. 2020-21 ஆண்டுக்கு ரூ.304 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.196 கோடி வழங்கப்பட்டுள்ளது. அம்மா
இருசக்கர வாகனம் திட்டத்தில் இதுவரை 5,319 நபர்களுக்கு ரூ.11 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா ஆடு, மாடுகள், தாலிக்கு தங்கம், உதவித்தொகை, சுயதொழில் கடன், அம்மா இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களால் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சிறந்து விளங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொய் பிரசாரம்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்து விடுவோம் என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மாணவ, மாணவிகளிடம் ஓட்டுகளை பெறுவதற்காக ‘நீட்’ தேர்வை ரத்து செய்து விடுவோம் என பொய் பிரசாரம் செய்து வருகிறார். ‘நீட்’ தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் மட்டும் தான் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘நீட்’ தேர்வு, உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டு நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தமிழகத்திற்கு மட்டும் எப்படி ‘நீட்’ தேவை ரத்து செய்துவிட முடியும். இது போன்றுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வந்தால் கடன் தள்ளுபடி செய்வோம் என பொய் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். பொதுமக்கள் இது குறித்து உண்மை தெரிந்து கொண்டார்கள்.
அதேபோல்தான் தற்போதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியாது என அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் தெரியும்.
Related Tags :
Next Story