வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2020 9:48 AM IST (Updated: 3 Dec 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கைவிட வேண்டும்

பின்னர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. போராடுகிற விவசாயிகளிடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கை ஏற்கப்படவில்லை கடும் குளிரிலும் உயிரை பணயம் வைத்து போராடுகிறபோது பிரதமர் மவுனம் காத்து வருகிறார். உடனடியாக விவசாயிகளை அழைத்து பிரதமர் மோடி பேச வேண்டும். போராட்டத்தினுடைய நோக்கத்தை உணர்ந்து இந்தியா முழுமையிலும் விவசாயிகள் ஒன்றுபட்டு போராட்டக்களத்திற்கு வரும் நிலையில் மத்திய அரசாங்கம் வேளாண் விரோத சட்டங்களை கைவிட முன்வரவேண்டும்.

பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்த கூட்டணி கட்சிகள் எல்லாம் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறுகிற நிலையில், தமிழக அரசு இந்த சட்டத்தை திரும்பப்பெற மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையை முற்றுகையிடுவோம்” என்றார்.

போராட்டத்தில் தஞ்சை மண்டல தலைவர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் பாஸ்கரன், கவுரவ தலைவர் திருப்பதி, துணை செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story