டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்


டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்
x
தினத்தந்தி 3 Dec 2020 4:37 AM GMT (Updated: 3 Dec 2020 4:37 AM GMT)

விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ரெயில் நிலையம் எதிரில் உள்ள தலைமை தபால் நிலையத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று 2-வது நாளாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதற்கு கட்சியின் திருப்பூர் தெற்கு கமிட்டி தலைவர் மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

80 பேர் கைது

இதன் பின்னர் போலீசாரின் பாதுகாப்பு தடுப்பையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையிட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த வடக்கு போலீசார் 80 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story