ஈரோடு திருநகர் காலனியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழர் கழகத்தினர் உண்ணாவிரதம்


ஈரோடு திருநகர் காலனியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழர் கழகத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 Dec 2020 5:31 AM GMT (Updated: 3 Dec 2020 5:31 AM GMT)

ஈரோடு திருநகர் காலனியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழர் கழகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையை திறக்கக்கோரி மது பிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட திருநகர்காலனி ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகிலேயே பலரும் உட்கார்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குடிமகன்கள் தகராறில் ஈடுபடுவதால் அடிதடி சம்பவங்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் டாஸ்மாக் கடையை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 30-ந் தேதி கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பவர் ஜெயகோபால் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டு இருந்த கமலாநகரை சேர்ந்த சந்திரன் (42) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் செந்தில்குமாரின் தலையில் கல்லை போட்டு தாக்கிவிட்டு சந்திரன் அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

உண்ணாவிரதம்

இந்த சம்பவம் காரணமாக நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று காலை 10 மணியில் இருந்தே டாஸ்மாக் கடையின் முன்பு மது பிரியர்கள் திரண்டு நின்றார்கள்.

இந்தநிலையில் ஜெயகோபால் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழர் கழகம் கட்சி சார்பில் கடைக்கு அருகில் உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை தொடங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

மதுபிரியர்கள் போராட்டம்

இதற்கிடையே பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடையின் முன்பு மதுபிரியர்களும் திரண்டார்கள். அவர்கள் கடையை திறந்து மது விற்பனையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். மேலும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தங்களது கோரிக்கையை மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இந்த போராட்டம் காரணமாக நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

கடையை அகற்றக்கோரி போராட்டம் நடக்கும்போது, கடையை திறக்க வலியுறுத்தி மதுபிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story