தண்டராம்பட்டு ஒன்றியத்தில் நடைபெறும் சாத்தனூர் அணையில் கலெக்டர் ஆய்வு
தண்டராம்பட்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சாத்தனூர் அணையை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தனூர் அணை அமைந்துள்ளது. 119 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது 90 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதேபோன்று ஜனவரி மாதமும் சாத்தனூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். சாத்தனூர் அணை மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
சாத்தனூர் அணையை புதிதாக பொறுப்பேற்றுள்ள திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அணைக்கு எந்த வகையில் தண்ணீர் வருகிறது, அணையை இன்னும் மேம்படுத்த செய்ய வேண்டிய பணிகள், பாசன வசதி பெறும் இடங்கள், குடிநீர் ஆதாரம் பெறும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வளர்ச்சி பணிகள்
அதைத்தொடர்ந்து தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் கீழ்ராவந்தவாடி கிராமத்தில 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், வரகூர் கிராமத்தில் நடைபெற்று வரும் மாதிரிப்பள்ளி பணி, கீழ்சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெறும் நீர் தேக்கத் தொட்டி பணிகளையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி திட்ட இயக்குனர் அரவிந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜலு, சம்பத், செயற்பொறியாளர் தணிகாசலம், தாசில்தார் மலர்க்கொடி, சாத்தனூர் அணை உதவி பொறியாளர் செல்வராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story