ஓய்வூதியம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல் நாகர்கோவிலில் 96 பேர் கைது


ஓய்வூதியம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல் நாகர்கோவிலில் 96 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2020 11:23 AM IST (Updated: 3 Dec 2020 11:23 AM IST)
t-max-icont-min-icon

அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கக்கோரி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 96 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களை போன்று மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையான ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பை 4 சதவீதம் உத்திரவாதம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதற்கு சங்க மாவட்ட செயலாளர் சார்லஸ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உசைன், பேராசிரியர் மனோகர ஜஸ்டஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் மோகன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

96 பேர் கைது

பின்னர் சங்க மாவட்ட செயலாளர் சார்லஸ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன்புறமுள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். 46 பெண்கள் உள்பட மொத்தம் 96 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீஸ் வேன், அரசு பஸ், மாற்றுத்திறனாளி ஒருவரின் ஆட்டோ ஆகியவற்றில் ஏற்றி ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story