சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் - பொதுப்பணித்துறை ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் - பொதுப்பணித்துறை ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2020 6:30 PM IST (Updated: 3 Dec 2020 6:18 PM IST)
t-max-icont-min-icon

இந்த மாதத்திலேயே சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுப்பணித்துறை ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக தென்பெண்ணை ஆறு விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மழை பெய்தபோதிலும் இங்குள்ள தென்பெண்ணை ஆற்றின் கடைகோடி வரை தண்ணீர் வராததால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஆற்றில் தண்ணீர் வராததை பயன்படுத்தி அதிகளவில் பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதவிர கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் இந்த ஆற்றிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

இதனால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கத்தினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வணிக அலுவலகத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் சாத்தனூர் அணையிலிருந்து நீர் பங்கீடு குறித்து விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர்கள் ஞானசேகரன், கனகராஜ், தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி, அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், நகர துணை செயலாளர் புருஷோத்தமன் மற்றும் விவசாய சங்கத்தினர் கேசவன், தட்சிணாமூர்த்தி, ராஜா உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், சாத்தனூர் அணையின் முழு கொள்ளவான 119 அடியில் தற்போது 92.70 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையினால் தென்பெண்ணை ஆற்றில் தற்போது ஈரப்பதம் உள்ளது. இந்த சமயத்தில் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் தென்பெண்ணையாற்றின் கடைகோடி வரை உடனடியாக சென்று விடும்.

விழுப்புரம் அருகே தளவானூர் பகுதியில் ரூ.25 கோடியில் தடுப்பணை கட்டியும், இதுவரை பலனில்லாமல் உள்ளது. அந்த தடுப்பணை கட்டி இதுவரை அங்கு தண்ணீர் வராமல் வறண்டு கிடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்திற்கு வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தண்ணீர் பங்கீடு அளிக்கப்படும். தற்போது முன்கூட்டியே அதாவது இந்த டிசம்பர் மாதத்திலேயே மழைக்காலத்தில் நமக்கான தண்ணீர் பங்கீட்டு அளவை அணையில் இருந்து திறந்து விட்டால் இங்குள்ள தென்பெண்ணையாற்றின் கடைகோடி வரை தண்ணீர் வரும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. அதுபோல் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படும். எனவே தமிழக அரசு சிறப்பு ஆணை பிறப்பித்து சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை கேட்டறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர்.

Next Story