கடலூர் அரசு மருத்துவமனையில் அம்மா பரிசு பெட்டகம் வாங்க கைக்குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்த தாய்மார்கள் - அதிகாரிகள் மீது புகார்
கடலூர் அரசு மருத்துவமனையில் அம்மா பரிசு பெட்டகம் வாங்க கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் வேதனை அடைந்தனர். அப்போது அவர்கள் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்தனர்.
கடலூர்,
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1,000 மதிப்புள்ள அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, சோப்புடன் கூடிய பெட்டி, கிலு கிலுப்பை பொம்மை போன்ற 12 வகையான பொருட்கள் அடங்கி இருக்கும்.
ஆனால் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் குணமடைந்த தாய்மார்கள் 50-க்கும் மேற்பட்டவர்களை வீட்டுக்கு செல்லுமாறு மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் நேற்று பிற்பகல் 12 மணி அளவில் வீட்டுக்கு செல்ல தயாரானார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளுக்கான பரிசு பெட்டகத்தை மாலை 4 மணிக்கு வந்து வாங்கி கொள்ளுமாறு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் கைக்குழந்தைகளுடன் மருத்துவமனை வளாகத்திலேயே நீண்ட நேரமாக காத்திருந்தனர். அவர்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் பிரசவித்த தாய்மார்களும் பெட்டகம் வாங்க கூடி நின்றனர். ஆனால் மாலை 5 மணி ஆகியும் அவர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் ஏன்? இப்படி தாமதப்படுத்துகிறீர்கள். நாங்கள் வேப்பூர், திட்டக்குடி, சிதம்பரம் போன்ற தொலை தூரங்களுக்கு செல்ல வேண்டும் என்று தகராறு செய்தனர்.
இதை கேட்ட அவர்கள் மாலை 6 மணிக்கு வருமாறு கூறினர். இதனால் மனவேதனை அடைந்த தாய்மார்கள் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை வாங்காமலேயே சென்று விட்டனர். ஒரு சிலர் மாலை 6 மணிக்கு பிறகு நீண்ட நேரம் காத்திருந்து வாங்கி சென்றனர். அப்போது அவர்கள் அதிகாரிகள் தங்களை அலைக்கழிக்கின்றனர். முன்கூட்டியே எங்களுக்கு பரிசு பெட்டகத்தை கொடுத்திருந்தால், நாங்கள் வீட்டுக்கு சென்றிருப்போம் என்று புகார் தெரிவித்தனர்.
இது பற்றி மருத்துவமனை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் இருப்பு இல்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் வரவழைக்கப்பட்டது. அதன்படி பிரசவித்த தாய்மார்களை வரவழைத்து கொடுக்க ஏற்பாடு செய்தோம். ஆனால் மழை பெய்ததால் சற்று தாமதம் ஆகி விட்டது என்றார்.
Related Tags :
Next Story