‘தி.மு.க.வின் கபட நாடகம் மக்களிடம் பலிக்காது’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
‘தி.மு.க.வின் கபட நாடகம் மக்களிடம் பலிக்காது‘ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்கள் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத பல்வேறு பயனுள்ள திட்டங்களை தந்துள்ளனர். சிறப்பான ஆட்சி மூலம் தமிழக மக்களின் முழுமையான ஆதரவு, நமக்கு உள்ளது. ‘நிவர்‘ புயலுக்கு, தமிழக அரசு எடுத்த முன்னெச்செரிக்கை நடவடிக்கை மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. புயல், மழை, வெள்ளம் என இயற்கை சீற்றம் நடைபெறும் இடங்களுக்கு முதல்-அமைச்சரே நேரடியாக சென்று களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நீட்தேர்வை கொண்டு வந்ததே, தி.மு.க. அங்கம் வகித்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தான். ஆனால் தற்போது நீட்தேர்வை எதிர்ப்பதை போல தி.மு.க.வினர் நடிக்கின்றனர். தி.மு.க.வின் கபட நாடகம் மக்களிடம் பலிக்காது. நீட்தேர்வை ஒருபோதும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் கொண்டு வந்தார். இதன் மூலம் 369 ஏழை-எளிய மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி அவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்று ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் செய்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தினந்தோறும் நடந்து வருகிறது. இதுபோன்று பல்வேறு ஊழல் வழக்குகள் தி.மு.க.வினர் மீது உள்ளது. எனவே ஊழலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை.
உடல் உறுப்புதானம் செய்ததில் தமிழகம் 6-வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. நீர்மேலாண்மையில், தமிழகம் சிறப்பான இடத்தில் உள்ளது. இதனால் தமிழக அரசை, மத்திய மந்திரி அமித்ஷாவே பாராட்டினார். இதேபோல் கல்வி, அறிவியல், நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராவார். இதற்கு நாம் அனைவரும் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், துணை செயலாளர்கள் பிரேம்குமார், நாகராணி, இணை செயலாளர் திராவிடராணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், அபிராமி கூட்டுறவு சங்க தலைவருமான பாரதிமுருகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வேலவன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், வக்கீல் அணி செயலாளர் ஜெயபாலன், மீனவர் அணி செயலாளர் மனோகரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.டி.ராஜன், கலைப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல்ரகீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story