விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு-மறியல்


விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு-மறியல்
x
தினத்தந்தி 3 Dec 2020 8:00 PM IST (Updated: 3 Dec 2020 7:43 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் பிரதமரின் உருவபொம்மை எரித்ததுடன், மறியல் போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதில் திண்டுக்கல்லில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் நாகல்நகரில் திரண்டனர். அப்போது அவர்கள் அங்குள்ள சிண்டிகேட் வங்கியை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடியின் உருவ பொம்மை மற்றும் படங்களை தீயிட்டு எரித்து கோஷமிட்டனர். உடனே போலீசார் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். அதற்குள் உருவபொம்மை முற்றிலும் எரிந்து விட்டது.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட 105 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக நாகல்நகரில் 30 நிமிடங்களுக்கு மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் நிக்கோலஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதேபோல் பழனியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இந்தியன் வங்கியை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை, பழனி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தடுத்தனர். இதனால் நால்ரோடு சந்திப்பு பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வேளாண் திருத்த சட்ட நகல், பிரதமரின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். அதில் பிரதமரின் உருவப்படத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் வேளாண் திருத்த சட்ட நகலை கிழித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட 75 பேரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story