வேப்பந்தட்டை அருகே தொடர்மழை: வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி


வேப்பந்தட்டை அருகே தொடர்மழை: வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி
x
தினத்தந்தி 4 Dec 2020 5:11 AM IST (Updated: 4 Dec 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே தொடர் மழையினால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் தாய் கண் முன்னே பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 33). இவரது மனைவி திரிசடை (28). இவர்கள் பசும்பலூரில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் கடந்த சில வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இவர்களது மகள்கள் யோசனா (7), கீர்த்திகா (5). மற்றும் ராமு (2) என்ற மகன் இருக்கிறான். இதில் யோசனா அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

வெங்கடேஷ் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் திரிசடை, குழந்தைகளுடன் பசும்பலூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திரிசடை குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். பசும்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.

பரிதாப சாவு

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திரிசடை குடியிருக்கும் ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவர் அருகே படுத்திருந்த யோசனா மீது சுவர் விழுந்ததில் அவள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். திரிசடை மற்றும் மற்ற 2 குழந்தைகளான கீர்த்திகா, ராமு ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த வேப்பந்தட்டை தாசில்தார் கிருஷ்ணராஜ், வருவாய் துறையினர் மற்றும் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கியிருந்த யோசனாவின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து வி.களத்தூர் போலீசார், யோசனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் கண்முன்னே...

இந்த சம்பவம் தொடர்பாக மகளை பறிகொடுத்த தாய் திரிசடை கதறி அழுதபடி கூறியதாவது:-

அதிகாலை 4 மணி அளவில் மடமட வென்று சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தபோது சுவர் சரிவது தெரிந்தது. இதனால் உடனடியாக, அருகே படுத்திருந்த குழந்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்து நான் இழுத்ததால் கீர்த்திகாவும், ராமுவும் தப்பித்து விட்டனர். யோசனாவை இழுப்பதற்குள் என் கண் முன்னே சுவர் இடிந்து விழுந்து விட்டது. இன்னும் சில வினாடிகள் தாமதித்திருந்தால் இந்த 2 குழந்தைகளையும் காப்பாற்றி இருக்க முடியாது.

இவ்வாறு கூறிய அவர் கதறி அழுதார்.

தொடர் மழையினால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story