மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை நச்சலூர் பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன + "||" + Widespread rains in Karur district caused 3 houses to collapse in Nachsalur area

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை நச்சலூர் பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை நச்சலூர் பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் நச்சலூர் பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.
கரூர்,

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இதனால் காலையில் பணிக்கு செல்வோர் மிகவும் அவதியடைந்தனர்.


சாலைகளில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலர் குடைபிடித்து சென்றதை காணமுடிந்தது. மேலும், கரூர், திருமாநிலையூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையானது இரவு வரை நீடித்தது.

3 வீடுகள் இடிந்து விழுந்து

நச்சலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதையடுத்து நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி தமிழ்ச்சோலை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 52) என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு பகுதி மண் சுவர் மழையில் ஊறி திடீரென நேற்று காலை 7.00 மணியளவில் கீழே விழுந்துள்ளது. இதை தொடர்ந்து செல்வராஜ் வீட்டின் சுவர் விழுந்ததில் அருகில் உள்ள கலியமூர்த்தி (45). என்பவரின் ஓட்டு வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.

மேலும் கலியமூர்த்தியின் மற்றொரு கூரை வீடும் சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீடு இடிந்து விழுந்ததில் பல வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை தாசில்தார் முரளிதரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி உரிய விசாரணை செய்து நிவாரணம் வழங்கப்படும் எனகூறினார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தோகைமலை

தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளிலும் உள்ளடக்கிய குக்கிராமங்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் ஏரிகள், குட்டைகள், குளம் மற்றும் வரத்து வாரிகளில் அமைந்துள்ள குடிமராமத்து பணிகள் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயத்திற்கு கிணறுகள் போர்வெல் போன்றவற்றிற்கு புதிய தண்ணீரை ஊற்ற ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நொய்யல்

நொய்யல், குறுக்குச்சாலை, மரவாபாளையம், சேமங்கி, பாலத்துறை, தவுட்டுப்பாளையம், வரப்பாளையம், என்.புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலையோரம் உள்ள கடை வியாபாரிகள் வியாபாரம் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூலித் தொழிலாளிகள், பொதுமக்கள் நேற்று எங்கும் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் விவசாய நிலங்களில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு பணப் பயிர்களில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர். அதேபோல் தொடர் மழையின் காரணமாக சாலையோரத்தில் நெடுகிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பாலத்துறை அருகே நெடுஞ்சாலையின் அருகே சாலை ஓரத்தில் வழி நெடுகிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் அந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது வாகனத்தின் டயர்கள் மழை நீரில் பட்டு அருகில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது படுவதால் சிரமப்பட்டு வருகின்றனர்.

வெள்ளியணை

வெள்ளியணை, ஜெகதாபி, பொரணி, உப்பிடமங்கலம், புலியூர், ஏமூர், மணவாடி, மூக்கணாங்குறிச்சி, காக்கா வாடி, பாகநத்தம், நொச்சிப்பட்டி, தம்மநாயக்கண்பட்டி, விஜயபுரம், பிச்சம்பட்டி, கே.பி.தாழைப்பட்டி, ஜல்லிப்பட்டி, மேட்டுப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை, இடி, மின்னல், காற்று இன்றி தூறல் மழையாக நேற்று பகல் முழுவதும் பெய்து தொடர்ந்து இரவிலும் பெய்துகொண்டிருந்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். மேலும் தொடர்ந்து பெய்த தூறல் மழையால் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாத நிலை விவசாயிகளுக்கு இருந்தது.இம்மழையால் பெரும் அளவில் தண்ணீர் எங்கும் தேங்கி நிற்கவில்லை. இப்பகுதி ஏரி குளங்கள் நிரம்பி விவசாயம் செழிப்பு அடைய உதவ வேண்டும் என எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

வேலாயுதம்பாளையம்- குளித்தலை

வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், கூலக்கவுண்டனூர், புகளூர், நாணப்பரப்பு, காகிதபுரம், மூலிமங்கலம், தோட்டக்குறிச்சி, மூர்த்திபாளையம், அய்யம்பாளையம், தளவாப்பாளையம், மண்மங்கலம், கடம்பங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலையில் தொடங்கிய மழை இடைவிடாமல் தொடர்ந்து சாரல் மழையாக பெய்ந்து கொண்டு இருக்கிறது.

குளித்தலை பகுதியில் நேற்று முன்தினம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கிய. நேற்று காலை வரை 11 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று இரவு வரை லேசாகவும் சிலநேரங்களில் மிதமான மழையாகவும் இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. இதனால் பல தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சாரல் மழை
தூத்துக்குடியில் நேற்று காலையில் பெய்த சாரல் மழை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
2. பழனி அருகே பலத்த மழை: தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் பிணத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்
பழனி அருகே பலத்த மழை காரணமாக தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து சென்றனர்.
3. தொடர் மழை: பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழைக்கு 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
5. மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் தொடர் மழை: தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கிய நெற்கதிர்கள்
மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வயலில் தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.