நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டில்தான் அதிக பெண் நீதிபதிகள் உள்ளனர்; புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு விழாவில், அட்வகேட் ஜெனரல் பெருமிதம்


புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
x
புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
தினத்தந்தி 4 Dec 2020 6:32 AM IST (Updated: 4 Dec 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் கொண்ட ஐகோர்ட்டு என்ற பெயரை சென்னை ஐகோர்ட்டு பெற்றுள்ளதாக, புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு விழாவில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பெருமிதம் கொள்வதாக கூறினார்.

காலிப்பணியிடம்
சென்னை ஐகோர்ட்டுக்கு 10 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். அதில், நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், எஸ்.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திகுமார், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதாக கூறியிருந்தார்.

இதன்படி, இந்த 10 புதிய நீதிபதிகளும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற 10 நீதிபதிகளையும் வாழ்த்தி, வரவேற்று அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பேசியதாவது:-

10 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டதால், ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. 12 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் அனைவரின் சார்பிலும் தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அதிக பெண் நீதிபதிகள்
என்னுடைய வாழ்நாளில், காலிப்பணியிடமே இல்லாமல், சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதிகள் பணியிடங்களும் நிரப்பப்பட்டு, அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வழக்கு களை விசாரித்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அதேபோல, 10 புதிய நீதிபதிகளும், சுமார் 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை நீதிபதிகளாக பணியாற்றியுள்ளனர். இவர்கள் சிவில், கிரிமினல், குடும்பநலம் உள்ளிட்ட அனைத்து வகையான வழக்குகளையும் விசாரித்து மிகப்பெரிய அனுபவத்தை கொண்டவர்களாக திகழ்வதால், சென்னை ஐகோர்ட்டில் தேங்கிக் கிடக்கும் பழைய வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என்றும் நம்புகிறேன்.

தேங்கிக் கிடக்கும் வழக்குகள் எல்லாம் விரைவாக விசாரித்து முடிக்க அனைத்து வக்கீல்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் உறுதி அளிக்கிறேன். இந்த ஐகோர்ட்டில் இன்று புதிய வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன. ஒன்று பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது, ஏற்கனவே பெண் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வி.எம்.வேலுமணி, ஜெ.நிஷா பானு, அனிதா சுமந்த், பவானி சுப்பராயன், ஆர்.தரணி, டி.கிருஷ்ண வள்ளி, ஆர்.ஹேமலதா, பி.டி.ஆஷா என்று 9 பேர் உள்ள நிலையில், புதிதாக 4 பெண் நீதிபதிகள் இன்று (நேற்று) பதவி ஏற்றனர். இதனால், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது மட்டுமல்ல, நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் கொண்ட ஒரே ஐகோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு என்ற பெயரும் நமக்கு கிடைத்துள்ளது. இதனால் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டும்.

தம்பதி பதவி ஏற்பு
அதேபோல, மற்றொரு வரலாறு ஒரே நேரத்தில் கணவன், மனைவி நீதிபதிகளாக பதவி ஏற்றுள்ளனர். நீதிபதிகள் கே.முரளிசங்கரும், டி.வி.தமிழ்ச்செல்வியும் கணவன், மனைவி ஆவர். இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவி ஏற்றுள்ளனர். சென்னை ஐகோர்ட்டு வரலாற்றில், இதுவரை தம்பதி ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவி ஏற்றது இல்லை.

பஞ்சாப் ஐகோர்ட்டில் விவேக் பூரி, அர்ச்சனா பூரி என்ற தம்பதி ஒரே நேரத்தில் நீதிபதிகளாக கடந்த ஆண்டு பதவி ஏற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய நீதிபதிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பெண் வக்கீல்கள் சங்கத்தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் எல்.செங்குட்டுவன் ஆகியோர் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர். இவர்களுக்கு நன்றி தெரிவித்து 10 புதிய நீதிபதிகளும் பேசினர்.

Next Story