தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்; ஐகோர்ட்டில் வக்கீல் தகவல்
தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று அவரது வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் கூறினார்.
போலீஸ் பாதுகாப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டது. சொத்துக்களை நிர்வகிக்கும் இவர்களுக்கு சொந்த செலவில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறியிருந்தது.
கடந்த முறை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தீபா, தீபக் ஆகியோருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவது குறித்து அவர்கள் இருவருக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் 2 மாதங்களுக்கு முன்பே கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இருவருக்கும் 6 மாதம் போலீஸ் பாதுகாப்பு வழங்க ரூ.20 லட்சத்து 83 ஆயிரத்தை அவர்கள் முன்பணமாக செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
வழக்கு முடித்துவைப்பு
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா சார்பில் ஆஜரான வக்கீல் சாய்குமரன், தீபாவுக்கு தற்போது தனியார் பாதுகாப்பு நிறுவனம் மூலமாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம். இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதப்படும் என்று கூறினார்.
தீபக் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.எல்.சுதர்சனம், “போலீஸ் பாதுகாப்பு வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும், பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் எத்தனை போலீஸ்காரர் பாதுகாப்புக்கு வேண்டும்? என்பது குறித்தும், போலீஸ் கமிஷனருக்கு, தீபக் சார்பில் விரைவில் கடிதம் அனுப்பப்படும்” என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story