பணி நிரந்தரம் கோரி மழையில் நடைபயணம் செல்ல முயற்சி: மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் 150 பேர் கைது


பணி நிரந்தரம் கோரி மழையில் நடைபயணம் செல்ல முயற்சி: மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் 150 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2020 1:28 AM GMT (Updated: 4 Dec 2020 1:28 AM GMT)

பணி நிரந்தரம் கோரி கொட்டும் மழையில் நடைபயணம் செல்ல முயன்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் 150 பேர் திருச்சியில் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு பயிற்றுனர்கள் 1,761 பேர் உள்ளனர். இவர்கள் சுமார் 1½ லட்சம் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக பணி செய்து வரும் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருச்சியில் இருந்து சென்னை கோட்டைக்கு நடைபயணம் செல்வதாக அறிவித்திருந்தனர்.

கொட்டும் மழையில் திரண்டனர்

இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் நேற்று காலை திரண்டனர். அப்போது மழை பெய்து கொண்டு இருந்ததால் அவர்கள் அருகில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ்ப்பகுதியில் ஒதுங்கி நின்றார்கள்.

நடைபயணம் செல்ல முயற்சி

திருச்சியில் இருந்து கிளம்பி சிறுகனூர், பெரம்பலூர், தொழுதூர், அரசனூர், விக்கிரவாண்டி, திண்டிவனம், மேல்மருவத்தூர், படலம், மறைமலை நகர் வழியாக சென்னை கோட்டையை அடைந்து முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பது இவர்களது திட்டமாகும்.

ஆனால், கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போலீசார் அவர்கள் நடைபயணம் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும், தடையை மீறி சிறப்பு பயிற்றுனர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி கிளம்பினார்கள். பெண் விடுதலை கட்சியின் நிறுவன தலைவர் சபரிமாலா அவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு இவர்களை இனியும் பணிநிரந்தரம் செய்ய உத்தரவிடவில்லை என்றால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றார். அதனைத் தொடர்ந்து பெண்கள் உள்பட சுமார் 150 பயிற்றுனர்களை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அவர்கள் அனைவரும் பீமநகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story